சிறு வயது சிந்தனைகள் - பகுதி IV
இந்து உயர்நிலைப் பள்ளியில் (ஆறாவது முதல் +2 வரை) பயின்ற காலத்தில் எனக்கு பாடம் கற்றுத் தந்த ஆசிரியர்களை இன்று எண்ணிப் பார்க்கும்போது, ஏன் குருவை தெய்வத்தினும் உயர்ந்த ஸ்தானத்தில் (மாதா, பிதா, குரு, தெய்வம்!) வைத்தார்கள் என்ற புரிதல் ஏற்படுகிறது! இந்நிலைக்கு நான் உயர அவர்களின் பங்களிப்பு அபரிமிதமானது. பள்ளியில் என் ஆசிரியர்கள் மெச்சிய மாணவனாகத் திகழ்ந்தேன் என்றால் அது மிகையாகாது. பள்ளி வாழ்க்கையில் எனக்கு வழங்கப்பட்ட பரிசுப் புத்தகங்கள், இரண்டு பெட்டிகள் நிறைய வீட்டில் இன்னும் இருக்கின்றன. என் நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் உபயோகமாக இருந்த அப்புத்தகங்களை என் மகள்களும் படிப்பார்கள் என்றே நினைக்கிறேன்!
இந்த அளவிலாவது என்னால் தமிழில் எழுத முடிகிறதென்றால், அதற்கு காரணமாக இருந்தவர்கள், என் தமிழார்வத்திற்கு வித்திட்டு தமிழை சிறப்பாகக் கற்றுத் தந்த ஆசான்களான சீவை என்று அழைக்கப்பட்ட திரு.சீ.வைத்தியநாதன், திரு.பத்மநாபன், திரு.கோபால் சக்ரவர்த்தி, திரு.ஸ்ரீநிவாசன் ஆகியோரே. அதுவும், திரு.ஸ்ரீநிவாசன் அவர்கள் செய்யுட்களை ராகத்துடன் (சாரீரம் சற்று ஒத்துழைக்காவிட்டாலும் கூட!) பாடி, பொருள் விளக்கம் தந்ததை மறக்கத் தான் முடியுமா? பள்ளிக்காலங்களில் தமிழ் இலக்கணத்தின் பால் எனக்கு மிகுந்த காதல் இருந்தது எனலாம். SSLC இறுதித் தேர்வில்(1979)தமிழில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதற்காக 'கம்பர் கழகம்' பரிசாக வழங்கிய பதக்கத்தை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.
1. ஓரு முறை ஆங்கிலப்பாட ஆசிரியர் திரு D.ராமானுஜம், கட்டுரைப் புத்தகம் எடுத்து வராத மாணவர்களை வகுப்பை விட்டு வெளியே செல்லுமாறு பணித்த மறு நிமிடம், அம்மாணவர்களில் நானும் ஒருவன் என்பதைப் பார்த்தவுடன், உத்தரவை திரும்பப் பெற்றுக் கொண்டு அனைவரையும் அமரச் சொன்னதும் (அதனால் சக மாணவர்கள் கடுப்பானதும்!)
2. மற்றொரு முறை, 11-ஆம் வகுப்பு வேதியியல் ஆசிரியர் TRR என்றழைக்கப்பட்ட T.R.ராஜகோபாலன், என்னுடன் பயின்ற அவரது மகனிடம் கேட்ட ஒரு வினாவுக்கு (Avogadro விதி என்ன?) விடை கூற அவனுக்கு உதவ முயன்றதற்காக, அவனை Avogadro விதியை 50 தடவையும், என்னை 100 தடவையும் எழுதுமாறு தண்டனை அளித்ததும், (அதை 'என் விதி' என்று நொந்தபடி, கையொடிய எழுதியதும்!)
3. மற்றொரு முறை, 9-ஆம் வகுப்பு அறிவியல் ஆசிரியர் திரு S.K.சேஷனிடம் அரையாண்டுத் தேர்வில் எனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய அரை மதிப்பெண்ணை(!) போராடிப் பெற்றதும்,
4. +1 வகுப்பு படிக்கையில், உயிரியல் சோதனைக் கூடத்தில், மிகுந்த மன சங்கடத்துடனும், பாவம் செய்கிறேனோ என்ற அச்சத்துடனும் குளோரோஃவாம் மயக்கத்திலிருந்த என் முதல் தவளையை அறுத்ததும்,
5. 11-ஆம் வகுப்பு கணித ஆசிரியர் திரு M.சுப்ரமணியன், Calculus பாடத்தை மிக அற்புதமாக பயிற்றுவித்ததும்,
6. 8-ஆம் வகுப்பு தமிழய்யா திரு. பத்மநாபன் "துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே!" என்ற நம்மாழ்வரின் பாடல் வரிகளை 'ழ'கரம் வராத மாணவர்களை பல முறை உரைக்கச் சொன்னதும்,
என் நெஞ்சில் என்றும் வாழும் 'பசுமை நிறைந்த நினைவுகளே'!
சின்னக் காஞ்சிபுரத்தில் தெற்கு மாடவீதியில் அமைந்த எங்கள் பரம்பரை வீட்டில் நாங்கள் செலவிட்ட நாட்களை என்னால் மறக்கவே முடியாது! அந்த வீட்டை விற்றே, கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஓடி விட்டன. அதன் பிறகு நானும் காஞ்சிபுரம் சென்றதாக ஞாபகமில்லை! வீட்டை வாங்கியவர், அதை இடித்து விட்டு, பல குடியிருப்புகள் கட்டி, வாடகைக்கு விட்டு விட்டார் என்பது யாரோ சொன்ன செய்தி!
பள்ளிக் காலங்களில், வருட விடுமுறையின் பல நாட்களை, அத்தை தனித்து வாழ்ந்த அவ்வீட்டில், நாங்கள் ஆனந்தமாக ஆடி ஓடி விளையாடிக் கழித்ததும்,
காலை வேளையில் அத்தை தரும் பழையதும் (பழைய சோறு!) தொட்டுக் கொள்ள, சட்டியில் காய்ச்சிய பழங்குழம்பும் அமிர்தமாக இனித்ததும்,
அத்தை சினிமா விரும்பி என்பதால், அவர் கூட்டிச் சென்ற பெரிய காஞ்சிபுரக் கொட்டகைகளில் பல பழைய திரைப்படங்களைக் கண்டு களித்ததும் (ஒரு சமயம், புடைபுடைக்கிற மே மாத வெயிலில் ஜட்கா வண்டியில் சென்று ரஜனியின் 'தாய்வீடு' படம் பார்த்தது!),
வரதராஜப் பெருமாள் கோயிலில் இருக்கும் தங்க பல்லியை பார்ப்பதற்காகவே, ஒரு நாளில் பல தடவை கோயிலுக்குச் சென்றதும்,
காஞ்சியில் குளத்தினடியில் வாழ்பவரும், 40 ஆண்டுகளுக்கொரு முறை சிறிது காலம் கோயிலுள் எழுந்தருள்ளி பக்தகோடிகளுக்கு அருள் பாலிப்பவருமான அத்தி வரதப்பெருமானை, கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன், குடும்பத்தோடு (அத்தையும் தான்!) பல மணி நேரம் வரிசையில் நின்று, தரிசனம் செய்ததும்
'நெஞ்சம் மறப்பதில்லை, அது நினைவை இழப்பதில்லை!' வகை ஞாபகங்களே!!!
இக்கட்டுரையை, என் 9-ஆம் வகுப்பு தமிழ்ப்பாடத்தில் இடம் பெற்ற, நேற்று தான் படித்தது போல் என் ஞாபகத்தில் பளிச்சென்று வீற்றிருக்கும் கம்ப ராமாயணச் செய்யுளுடன், நிறைவு செய்கிறேன்!
சூடையின் மணி என் கண்மணி ஒப்பது, தொன்னாள்
ஆடையின் கண்ணிருந்தது பேரடையாளம்!
நாடி வந்தென தின்னுயிர் நல்கிய நம்பா!
கோடி என்று கொடுத்தனள் மெய்ப்புகழ் கொண்டாள்..
என்றென்றும் அன்புடன்
பாலா
4 மறுமொழிகள்:
//ஓரு முறை ஆங்கிலப்பாட ஆசிரியர் திரு D.ராமானுஜம், கட்டுரைப் புத்தகம் எடுத்து வராத மாணவர்களை வகுப்பை விட்டு வெளியே செல்லுமாறு பணித்த மறு நிமிடம், அம்மாணவர்களில் நானும் ஒருவன் என்பதைப் பார்த்தவுடன், உத்தரவை திரும்பப் பெற்றுக் கொண்டு அனைவரையும் அமரச் சொன்னதும் (அதனால் சக மாணவர்கள் கடுப்பானதும்!)
//
ஆசிரியர் மெச்சின மாணாக்கனா இருந்திருக்கீங்க...ஹம்ம்ம்...
எங்க வீட்டுப் பக்கத்தில் தான் பூகோள வாத்தியார் இருந்தார். அவ்வப்போது விடுப்புக் கடுதாசு என்னிடம் தான் கொடுத்து விடுவார் (இதுல ஒரு பெருமை அப்போ ) . அப்புறம் வேறு எங்கோ குடிபெயர்ந்த பிறகு ஒரு நாள் பூகோளப் புத்தகம் கொண்டுவராதவர்களுக்கு ஆளுக்கு ஒரு அடி கொடுத்தார். விடுப்புக் கடுதாசு கொடுத்து அடுத்துவிட்ட என்னை மன்னிப்பார் என்று நான் மனப்பால் குடிக்க, அவர் " என்னப்பா, முத்தையா நகர்ல இப்போ நல்லதண்ணி ஒழுங்கா வருதா" என்று கேட்டு, பதிலுக்குக் காத்திராமல் 'சுள்' ளென்று ஒரு அடி கொடுத்தார். நான் றௌஸரில் கையை தேய்த்த படியே "வருது ஸார்" என்றேன்.
பதிவு நச்'னு இருக்கு.
சாம்பார், பழைய சோறு, அப்படினு ஆசையை தூண்டிட்டீங்களே! இந்த பசுமையான நினைவுகள் உங்கள் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளதை கடைசி செய்யுளின் மூலம் உணர்த்திவிட்டீர்கள், பலே!
பாலா,
ஆகா ப்ரமாதம்! உங்க பழைய நினைவுகளைச் சொல்லி எனது பழைய ஞாபகங்களை தூண்டிவிட்டுட்டீங்க. ஆட்டோக்ராப் படம் மாதிரி
என் தமிழ்க் காதலை வளர்த்தவரும் திரு. பத்மநாபன் அவர்கள்தான். நான் குறிப்பிடும் பத்மநாபனும் உங்கள் தமிழையாவும் ஒருவரே என்று என் உள்ளுணர்வு கூறுகிறது. சின்னக் காஞ்சிபுரத்திற்கு நான் 1966-ஆம் வருடம் பிரும்மோத்சவம் பார்க்க வந்தேன். சன்னிதித் தெருவில் திரு. ஜீயப்பய்யஙார் வீட்டில்தான் தங்கினேன். நீங்கள் எழுதியது என் பழைய நினைவுகளை மீன்டும் தூண்டுகிறது.
அன்புடன் ராகவன்
Post a Comment